search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபுணர் குழு"

    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #NGT #TNgovernment #Sterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.

    அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையையும் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    இதைத்தொடர்ந்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிபுணர் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

    இந்த அறிக்கையை கடந்த 28-ந்தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது வாசித்துக் காட்டிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நிபுணர் குழு அறிக்கையின் நகல்களை இரு தரப்புக்கும் வழங்குமாறும் இந்த அறிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 7-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று தமிழக அரசு தரப்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் சர்மா தாக்கல் செய்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா? நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய மட்டுமே இந்த குழு நியமிக்கப்பட்டது.

    ஆனால் இந்த குழு இவற்றையெல்லாம் விட்டு விட்டு ஆலையை மூடியது தவறா? என்று ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த குழு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு உள்ளது.

    இந்த குழு பாரபட்சமாக செயல்பட்டு இருக்கிறது. குழுவின் அறிக்கை முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதங்களில் உள்ள உண்மை நிலவரங்களை இந்த குழுவின் அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. இந்த குழு எந்த இடத்திலும் நிலத்தடி நீர், தாமிரக்கழிவு தொடர்பாக உருவாகும் சுற்றுச்சூழல் மாசு பற்றி சரிவர ஆய்வு நடத்தவில்லை. அது தொடர்பாக எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ச்சியாக அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தேவையான வாய்ப்புகள் ஆலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டன. இதனை தன்னுடைய கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிபுணர் குழு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் ஏதோ உடனடியாக இந்த முடிவை எடுத்தது போல சித்தரித்து உள்ளது முற்றிலும் தவறாகும்.

    மேலும், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் மனு தாக்கல் செய்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முகாந்திரம் ஏதும் இல்லை. இந்த குழுவின் நியமனம் மற்றும் அதன் அறிக்கை ஆகியவற்றுக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை.

    இவ்வாறு தமிழக அரசின் பதில் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. #NGT #TNgovernment #Sterlite

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 6 கேள்வி பதில் தவறாக உள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து நிபுணர் குழு மூலம் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    நகராட்சி கமி‌ஷனர் உள்ளிட்ட 1200 காலி இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த 11-ந்தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

    இந்த தேர்வு 2 பிரிவாக நடந்தது. பொது அறிவுக்கு 100 கேள்வியும், மொழி பாடத்தில் இருந்து 100 கேள்விகளும் கேட்கப்பட்டன.

    இதற்கான விடை ‘ஆன்சர் கீ’ வடிவில் கொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த தேர்வுக்கான 200 கேள்விக்கும் சரியான விடையை தேர்வாணையம் கடந்த 13-ந்தேதி வெளியிட்டிருந்தது. கேள்வி பதிலில் தவறு இருந்தால் ஆன்-லைனில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

    இதில் 6 கேள்வி பதில் தவறாக உள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 2 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி.யிடம் முறையிட்டுள்ளனர்.

    இதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நடராஜன் சுப்பிரமணியன் கூறியதாவது:-

    கடந்த 11-ந்தேதி நடைபெற்ற குரூப்-2 தேர்வில் கொடுக்கப்பட்டிருந்த கேள்வி-பதிலை சரிபார்த்த போது 6 கேள்வி-பதில் தவறாக உள்ளது. அதில் 153-வது கேள்வியில் நேபாள்-இந்தியா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை எந்த இடத்தில் நடந்தது என்பதற்கு சரியான பதில் கொல்கத்தா என்று கொடுத்துள்ளனர். அது தவறு. உண்மையான பதில் காத்மாண்டு.

    அடுத்ததாக உணவு தானிய உற்பத்தியில் தஞ்சாவூர் தான் முதன்மை இடத்தில் உள்ளதாக கொடுத்துள்ளனர். அது தவறு. 2013-2014 ஆண்டு மாவட்ட கலெக்டரின் அதிகார பூர்வ இணையதளத்தில் விழுப்புரம் என்றும் இந்த மாவட்டத்தில்தான் 10 சதவீதம் உற்பத்தி அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    139-வது கேள்வியான புலித்தேவருக்கு உதவியது பிரெஞ்சுபடை. ஆனால் இவர்களின் விடையில் டச்சுப்படை உதவியதாக கூறி உள்ளனர். இது தவறு.

    11-வது கேள்வியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை எத்தனை நாட்கள் என்று கேட்டு 50, 100, 150 என கேட்டுள்ளனர். இதற்கு சரியான விடை 100 என டி.என்.பி.எஸ்.சி. கூறி உள்ளது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் 150 நாட்கள் என உயர்த்தி இருந்தனர்.

    எனவே 100 என்று எழுதி இருந்தாலும், 150 என்று எழுதி இருந்தாலும் சரி தான்.

    183-வது கேள்வியில் தேசிய விவசாய கொள்கையின் அடிப்படையில் எவ்வளவு வளர்ச்சியை எதிர்பார்த்தனர் என்பதற்கு 4 சதவீதம் என்பதில் கூறி உள்ளனர். ஆனால் 4 சதவீதத்துக்கும் மேல் வர வேண்டும் என்று எதிர்பார்த்தனர். எனவே 6 அல்லது 8 என்று எழுதினால் சரியான பதிலாகும்.

    மற்றொரு கேள்வியான ‘பிங் புல்வாம்’ என்ற ஒரு பூச்சியின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதில் எழுத்து தவறு உள்ளது.

    எனவே மேற்கண்ட 6 கேள்விக்கான பதிலை எழுதியவர்களுக்கு 9 மதிப்பெண் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது சம்பந்தமாக தேர்வாணைய அதிகாரி நந்தகுமார் கூறுகையில், குரூப்-2 தேர்வு வினா-விடை தவறு சம்பந்தமாக 2 ஆயிரம் பேர் முறையிட்டு உள்ளனர்.

    அவர்கள் சொன்ன பதில்களை நிபுணர் குழு வைத்து ஆய்வு செய்வோம். டி.என்.பி.எஸ்.சி.யின் கேள்வி பதில் தவறாக இருந்தால் அதை எழுதியவர்களுக்கு உரிய மதிப்பெண் கிடைக்க ஆலோசிப்போம் என்றார். #tamilnews
    சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்ற நிபுணர் குழு அமைத்திட வேண்டும் என்று தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #ChennaiSalemHighway
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவுச்சாலை” அமைக்கும் திட்டத்தை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயிகள், பாரம்பரியமாகத் தங்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான விளை நிலங்கள் பறிபோகின்றனவே என்று மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

    இந்த திட்டத்தை, “எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும் அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன?.

    நீர் ஆதாரமே தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தத் திட்டத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், நூறுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசு புறந்தள்ளிவிட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது ஏன்?.

    தி.மு.க. சார்பில் மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்துங்கள் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்த பிறகு, ஆங்காங்கே நீர்த்துப்போன வெற்றுக் கருத்துக்கேட்பு என்ற கண்துடைப்பு நாடகம் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் ஏனோதானோவென நடத்திவிட்டு, விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றுவதைத் தொடருவது ஏன்?.

    திட்டத்திற்கு எதிராக நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களை கைது செய்வதையும் மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்?. அ.தி.மு.க. அரசின் இந்த அப்பட்டமான அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிக முக்கியம் என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியாவது உணர முன்வரவேண்டும்.

    சொந்த மாவட்ட மக்களின் போராட்டத்தைப் பார்த்தாவது, அவர் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் மக்களின் வீரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில், இந்த சென்னை - சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது இப்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்திட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #ChennaiSalemHighway
    ×